அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து
காணப்படுகின்றன. இதனால் மரணங்கள், அங்கவீனங்கள் போன்றன ஏற்படுகின்றன.
அந்தவகையில் இந்த விபத்துக்களுக்கு கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில்
சாரத்தியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும்
உறக்கம் என்பன காணப்படுகின்றன.
அத்துடன் பொலிஸாரின் செயற்பாடுகளும்
விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து பொலிஸார்
போக்குவரத்து பொலிஸார், வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களான வீதி ஓரத்தில்
உள்ள மஞ்சள் கோடு, வீதியின் திருப்பங்கள் போன்ற இடங்களில் நின்று வாகனங்களை
மறிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு வேளைகளில் கடமையில் இருக்கும் போக்குவரத்து
பொலிஸார் இருள்சூழ்ந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு டோர்ச லைட்டின்
ஒளியினை வீதியில் செல்லும் சாரதிகளின் கண்களை நோக்கி பாய்ச்சி அவர்களை
மறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவும் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைவதாக சாரதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதன்படி இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு – சித்தங்கேணி வீதியில்
இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டும் திடீர் திருப்பங்கள்
குறித்த பகுதியில் ஆபத்தான இரண்டும் திடீர்
திருப்பங்கள் காணப்படுகின்றன.
அந்த வீதி ஓரத்தில் மஞ்சள் கோடும்
காணப்படுகின்றன. அந்த திருப்பத்தில் பொலிஸார் நிற்பது இரண்டு பக்கத்தில்
இருந்து வரும் வாகனங்களின் சாரதிகளுக்கும் தெரியாத நிலைகாணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியால் வரும் வாகனங்களின் கண்களில் தாங்கள் தென்படாது இருப்பதற்காகவே
அந்த பகுதியில் நின்று வாகனங்களுக்கும், சாரதிகளுக்கும், பயணிகளுக்கும்
ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை மறிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பகுதியில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது எனவும், அப்படி மறிப்பது வீதி
விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது ஆபத்து நிறைந்தது எனவும் பொலிஸாருக்கு எடுத்துக்கூறினாலும் பொலிஸார் கண்டுக்கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து வடக்கு மாகாண
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

