ரஷ்யா- உக்ரைன் இடையேயான மோதல் 03 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் உக்ரைனின் ஒரு பகுதியில் உள்ள நாய்கள் திடீரென நீல நிறத்திற்கு மாறியுள்ளமை பலரையும் ஆச்சரியத்திற்கு உட்படுத்தியுள்ளது.
உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்களே இவ்வாறு நீல நிறத்திற்கு மாறியவை ஆகும்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
39 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அணு உலை விபத்து
உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு வந்தது. இதன் ஒரு அணு உலையில், 1986 ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான அணு விபத்தாக கருதப்படும் இந்த விபத்தை அடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

விபத்துக்கு பின், அந்நகரத்தின் சுற்றுபுறங்களில் உள்ள பகுதி, செர்னோபில் விலக்கு மண்டலம் என அறிவிக்கப்பட்டது. இம்மண்டலத்தில், கதிர்வீச்சுக்கு பின் வெளியேறிய மக்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் வசித்து வந்தன.
அதன்படி தற்போது அங்கு, 700 நாய்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கடுமையான கதிர்வீச்சு நிறைந்த மண்டலத்தில் வசிக்கும் இந்நாய்களின் எதிர்ப்பாற்றல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்நாய்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ கவனிப்புகளை, ‘டாக்ஸ் ஒப் செர்னோபில்’ என்ற அமைப்பின் துணை நிறுவனமான, ‘கிளீன் பியூச்சர்ஸ் பண்டு’ வழங்கி வருகிறது. அண்மையில், இங்குள்ள நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறியுள்ளன.
இந்த நிறமாற்றம் கடந்த வாரம் இல்லை என்றும், கடந்த 39 ஆண்டுகளுக்கு பின் இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இதில் ஒரு நாய், முழுமையாக நீல நிறத்தில் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
நிறம் மாற்றத்திற்கான காரணம்
நிறம் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. இது, ஏதாவதொரு ரசாயனத்தில் விழுந்திருக்கலாம் எனவும், இதனால், அதன் வெளிப்புறம் நீல நிறத்தில் மாறியிருக்காலம் என கூறப்படுகிறது.

இந்த மாற்றம் இவற்றின் ஒட்டுமொத்த உடல்நலனில் உள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது என நம்பப்படுகிறது. எனினும், இதை உறுதிபடுத்த முழுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும் என குழுவினர் தெரிவிக்கின்றனர்.
நாய் பராமரிப்பு குழு
இந்நாய்களை பிடித்து அவற்றின் நீல நிறத்துக்கான காரணத்தை கண்ட றிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை அளிப்பதே தற்போதுள்ள முதன்மையான நோக்கம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த நிறமாற்றம், கதிர்வீச்சால் ஏற்பட்ட மரபணு பிறழ்வாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிறம் மாறிய போதிலும், இங்குள்ள நாய்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக நாய் பராமரிப்பு குழு தெரிவித்துள்ளது.
மேலும், அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தைத் தவிர அவற்றின் இயல்பான நடத்தையில் பெரிதாக எவ்வித மாற்றங்களும் இல்லை என அந்த குழு கூறியுள்ளது.

