ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் நவீன் திஸநாயக்க, நாளையதினம் நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசுக்கெதிரான பேரணியில் கலந்து கொள்ளப்போவதில்லையென தெரிவித்த நிலையில் ராஜபக்சாக்களின் அரசியலை நம்பக்கூடாது என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தியதாக நவீன் திசாநாயக்க கூறினார்.
ரணிலின் முடிவு
கலந்துரையாடலின் போது, கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல 21வது கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்று கேட்டபோது, விக்ரமசிங்க தான் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

இதன்மூலம் ராஜபக்சாக்கள் சம்பந்தப்பட்ட அரசியலை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதையும் அந்தச் செய்தி வலியுறுத்தியது.
ஐ.தே.க பங்கேற்காது
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் மூத்த ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, நாளையதினம் நுகேகொடையில் நடைபெற உள்ள கூட்டம் நாமலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அரசியல் நிகழ்வு என்றும், எனவே ஐக்கிய தேசியக் கட்சி அதில் பங்கேற்பதோ அல்லது ஆதரவளிப்பதோ பொருத்தமானதல்ல என்றும் கூறினார்.

கட்சியின் பல மூத்த உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

