Courtesy: H A Roshan
இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பட்லி ஹிஷாம் ஆதம், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரை நேற்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, தூதுவர் ஹிஷாம் ஆளுநரின் தலைமைத்துவத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், திருகோணமலையை மகத்தான ஆற்றலைக் கொண்ட அழகிய இடமாக வர்ணித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் கடற்றொழில் துறைகளில் வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்திய அவர், கிழக்கு மாகாணத்தில் பாம் ஒயில் பயிரிடுவதில் மலேசியா தொடர்ந்து ஆதரவளித்து வருவதை எடுத்துரைத்தார்.
பல்கலாசார நல்லிணக்கம்
மேலும், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவுவதற்கு நட்பு நாடு என்ற வகையில் மலேசியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். தூதுவரின் கருத்துக்களை ஆளுநர் ரத்னசேகர வரவேற்றதுடன், மலேசியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் சமாதானமாக வாழும் கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான பல்கலாசார நல்லிணக்கத்தை அவர் கோடிட்டுக் காட்டியதுடன், மாகாணத்தின் குறிப்பாக சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி தொடர்பில் எடுத்துரைத்தார்.
நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் அல்லது சட்டவிரோத நடைமுறைகளைத் தவிர்ப்பதற்கு தனது நிர்வாகம் உறுதிபூண்டுள்ளதாக ஆளுநர் தூதுவரிடம் உறுதியளித்தார்.
மலேசியாவிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் மேலதிக பகுதிகள் பற்றிய நினைவுப் பரிசுகள் மற்றும் கலந்துரையாடலுடன் சந்திப்பு நிறைவுற்றது.