மெக்சிகோ (Mexico) மற்றும் கனடாவிலிருந்து (Canada) அமெரிக்காவுக்கு (United States) முட்டை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இந்நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் முட்டை விலை உயர்வு காரணமாக, அமெரிக்க நுகர்வோர் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு
முறையான ஆய்வு செய்யப்படாத முட்டைகள் நோய்களைப் பரப்ப வாய்ப்புள்ளதால், அமெரிக்கா முட்டை இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறையின் தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை “முட்டை பறிமுதல்” சம்பவங்கள் நாடு முழுவதும் 36% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
டெக்சாஸ் எல்லையின் ஒரு பகுதியை கண்காணிக்கும் எல்லை பாதுகாப்பு துறையின் லாரேடோ அலுவலகம், முட்டை பறிமுதல் சம்பவங்கள் 54% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சராசரி விலை
அமெரிக்காவில் கடந்த மாதம் ஒரு டஜன் உயர்தர முட்டைகளின் சராசரி விலை $5.9 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டஜன் தரமான முட்டைகளின் சராசரி விலை $3 ஆக இருந்தது.
தற்போது, சில நகரங்களில் ஒரு டஜன் முட்டைகளின் விலை $10 ஐ தாண்டியுள்ளது ஆனால் அதே நேரத்தில், மெக்சிகோவில் ஒரு டஜன் முட்டைகளின் சராசரி விலை $2 இற்கும் குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.