இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
செலவின அறிக்கைகள் இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகள்
அத்துடன் இம்மாதம் 23ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளதுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ளும் வேட்பாளர்களுக்கான ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவது தொடர்பான ஏற்பாடுகள் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து வேட்பாளர்களும், சுயேட்சை குழுக்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.