பெரும்போகத்திற்கென விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியத்தை வழங்குவதற்கான ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின் (anura kumara dissanayake)உத்தரவை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) இன்று (01) தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்,
தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்
“இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் ஆணையம் அதை தற்காலிகமாக நிறுத்தச் சொன்னது. தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதன்படி செயல்படுவோம்.
”
செப்டெம்பர் 26ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஹெக்டேயருக்கு 15,000 ரூபா உர மானியத்தை எதிர்வரும் பருவத்தில் 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்.
ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய மானியங்களை வழங்குவதன் மூலம் ஒரு தரப்பினர் பயனடையலாம் என்பதால், மானியம் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் உரிய பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
அரிசி தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும்
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய அமைப்பு ஒன்று ஒன்றிணைந்து இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் பருவத்துக்கான உர மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.