அமெரிக்க(USA) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு(Donald Trump) தேர்தல் நிதியாக ரூ.375.80 கோடியை எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்(Elon Musk) கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடக்கவுள்ள நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (வயது 81), போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (வயது 78) களம் போட்டியிடுகிறார்.
தேர்தல் நிதி
இந்நிலையில், அதிபர் தேர்தலில், எலான் மஸ்க் நடுநிலை வகிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
எனினும், ட்ரம்ப் மீதான துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து, தேர்தலில் டிரம்பை ஆதரிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
அதற்கமையவே, ட்ரம்பிற்கு, 4.5 கோடி டொலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதியாக எலான் மஸ்க் கொடுக்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ட்ரம்பிற்கு தேர்தல் நிதியாக தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டொலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்சம் டொலர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.