உலகின் பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் (Elon Musk) மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் (Tesla) பங்குகள் நேற்று வரையில் 15 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இது செப்டம்பர் 2020 க்குப் பிறகு அந்த நிறுவனத்தின் மிக மோசமான சரிவு என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உட்பட எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தொடர்ச்சியாக ஏழாவது வாரமாக இழப்புகளைச் சந்தித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump )நெருக்கமாக எலோன் மஸ்க் பணியாற்றத் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் டெஸ்லா பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு
கடந்த டிசம்பர் 17ம் திகதி டெஸ்லா பங்குகள் ஒன்றின் விலை 479.86 டொலர் என இருந்தது, தற்போது அதன் சந்தை மதிப்பில் 800 பில்லியன் டொலர் அளவுக்கு பேரிழப்பை சந்தித்துள்ளது.
டெஸ்லா பங்குகளுக்கு எட்டாவது மிக மோசமான நாளாக நேற்றைய நாள் (10.03.2025) பதிவாகியுள்ளது.
மேலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை, டெஸ்லாவின் பங்குச் சரிவுக்கு முதன்மை காரணமாக இருந்தது.
மேலும், வரிகள் மற்றும் சாத்தியமான வர்த்தகப் போர் ஆகியவை உற்பத்தியைப் பாதித்து விலைகளை உயர்த்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
டெஸ்லாவின் புதிய கார்
அமெரிக்கா முழுவதும் டெஸ்லா நிறுவனங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் எலோன் மஸ்க் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெஸ்லா வாகனங்கள் மற்றும் நிறுவனத்தை இலக்காகக் கொண்டு வன்முறைக்கிளர்ச்சிகள் மற்றும் தீ வைப்பு முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் ஐரோப்பாவில் டெஸ்லாவின் புதிய கார் விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவிகித வீழ்ச்சிக்கு காரணம் அந்த நிறுவனத்தின் மீதான வெறுப்பு என பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆய்வாளர்கள் திங்களன்று வெளிப்படுத்தியுள்ளார்.