வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களை இலங்கையர் என்ற சமத்துவத்தின் கீழ் கொண்டுவர அநுர அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கல்வி முறையில் மாற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இலங்கையர் என்ற அடிப்படையில் வாக்களித்தாலும் வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையே ஒரு சுமூகமான நிலைமை இல்லை.
எனவே, நாட்டிலுள்ள தமிழ், மற்றும் சிங்கள மக்களிடையே ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்த கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கட்டாய பாடமாக கல்வி முறையில் உள்ளடக்க வேண்டும் என தற்போதைய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினால், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதுடன் மக்களிடையே நிலவும் சுமூகமற்ற தன்மைக்கு தீர்வாக அமையும்.” என அவர் தெரிவித்துள்ளார்.