கையடக்க தொலைபேசி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டதாக போலி பற்றுச்சீட்டுக்களை வழங்கி இலட்சக்கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம், இவர் பிரபல அரசியல்வாதியின் சகோதரர் என போலி முகம் காட்டி , ரூபா 85,000 மதிப்புள்ள நாய்க் குட்டியை வாங்கி, உரிமையாளருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பணத்தைச் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
போலி பற்றுச்சீட்டுக்கள்
சந்தேக நபர், உரிமையாளரின் கையடக்க தொலைபேசிக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பற்றுச்சீட்டு ஒன்றை அனுப்பியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தியதாக நம்பி, உரிமையாளர் தனது சொந்த செலவில் இரத்தினபுரியிலிருந்து சந்தேக நபரின் முகவரிக்கு முச்சக்கர வண்டியில் நாய்க் குட்டியை அனுப்பியுள்ளார்.
இருப்பினும், அதற்கான பற்றுச்சீட்டு போலியானது என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
விசாரணைகளுக்குப் பின், சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியல்
மேலும் விசாரணைகளில் சந்தேக நபர், இதேபோன்ற பற்றுச்சீட்டுகளை பயன்படுத்தி நாவல பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையிலிருந்து 31,187 ரூபா க்கு பொருட்களை பெற்றுள்ளார்.

மேலும், அவர் 200,000 ரூபா மதிப்புள்ள தொலைக்காட்சியையும் மோசடியாகப் பெற்றுள்ளார்.
சந்தேக நபர் நீண்ட காலமாக சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான கேக்குகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு இதே முறையை கையாண்டுள்ளார்.
சந்தேக நபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

