புதிய இணைப்பு
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (15) வேட்புமனுக்களை சமர்ப்பித்த 39 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட மூன்று ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப் பணங்களைச் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) அறிவித்துள்ளார்.
இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்புமனுத் தாக்கல் முற்பகல் 11.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக தற்போது 11.30 மணி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை சமர்பிப்பதற்காக வேட்பாளர்கள் சற்று முன்னர் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனர்.
அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ம.ஜ.த.வின் தலைவர் திலித் ஜயவீர மற்றும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச, தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இராஜகிரியவில் (Rajagiriye) உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் (Election Commission of Sri Lanka) இன்று முற்பகல் 11 மணி வரையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை தற்போது முதல் முற்பகல் 11.30 வரையில் வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
அத்துடன், இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள், விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/E5cd5fw3Hng