சரத் பொன்சேகாவை ஒரு சாட்சியமாக மாற்றி வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் உடனடியாக ஆராய வேண்டும் என தமிழரசு கட்சி யின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2026 ஆம்
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு
மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இது தீர்க்கப்படுவதும் வரவு செலவுத் திட்டத்திற்கு சாதகமாகவே அமையும்.
அரசு பொறுப்பு கூறவேண்டும்.
இது தீர்க்கப்பட்டால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தது.
தற்போது 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை கையில் எடுக்க வேண்டும் என சொல்லப்பட்டது.
அந்த அடிப்படையில் பார்க்கும் போது இந்த இறுதி யுத்தத்தில் மனித பேரவலம் இடம்பெற்றது.
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இதற்கு அரசு பொறுப்பு கூறவேண்டும். உண்மைகளைக் கண்டறிய வேண்டும். பரிகார நீதி வழங்க வேண்டும்.
மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாது தடுக்க வேண்டும்
என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டன.
ஆனால் இன்னும் அந்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் பொருளாதாரத்தோடு இந்த பிரச்னைக்கு நெருக்கமான தொடர்பிருக்கின்றது.
செம்மணியில் கிருஷாந்தி கொலை
வடக்கு – கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள்
தொடர்பாகவும் பேச வேண்டியிருக்கின்றது.

கடந்த காலங்களில் பாலியல் பலாத்காரங்கள், பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றிருந்தன.
மத்திய முகாம் என்ற இடத்தில் கோணேஸ்வரி என்ற தாய்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்ட்டிருந்தார்.
அதேபோன்று சாரதாம்பாள் புங்குடுதீவில் கொலை செய்யப்ட்டிருந்தார். கிருஷாந்தி செம்மணியில் கொலை செய்யப்ட்டிருந்தார்.
இசைப்பிரியா என்ற விடுதலைப்புலிகளின் ஊடகவியலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஒப்புதல் வாக்குமூலம்
இந்த இடத்தில் இது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு முக்கிய விடயத்தை சொல்லியுள்ளார்.
அவர் தானாக முன்வந்து சில ஒப்புதல் வாக்குமூலங்களை ஊடகங்களுக்கு சொல்லி வருகின்றார்.

அந்த வாக்கு மூலங்களின் அடிப்படையில் பார்க்கின்ற போது இசைப்பிரியா படுமோசமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர் புலனாய்வு பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரண என்பவர் என சரத் பொன்சேகா சொல்லியுள்ளார்.
அத்தோடு ஜகத் ஜயசூரிய என்பவரைப் பற்றியும் சொல்லியுள்ளார்.
யுத்தத்துக்கு தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு சாட்சியமாக இந்த விடயங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் கூட படுகொலை செய்யப்பட்டுளார்கள்
இதற்கு காரணமானவர் சவேந்திர சில்வா என்றும் சொல்லியுள்ளார்.
இவ்வாறான நிலையில் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பில் இந்த அரசாங்கம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றது.
போர்க்குற்ற சாட்சியங்கள்
இந்த நிலையில்தான் யுத்தத்துக்கு தலைமை
தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவம் செய்ய குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே இந்த விடயம் ஆராயப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு போர்க்குற்ற சாட்சியங்கள் தானாகவே கிடைத்துள்ளன.
எனவே
இவற்றை இந்த அரசு கையாளவேண்டும் .
தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இந்த அரசு துரிதமாக கையாள வேண்டும் என்றார்.

