முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் (Anura Priyadarshana Yapa) அவரது மனைவியும் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை
2014 ஆம் ஆண்டு பிங்கிரிய, நாரம்மல பகுதிகளில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 61 லட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபாய் நிதியைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அந்த நிதியை அதற்காகப் பயன்படுத்தாமல், அதை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுள்ளது.
அதன்படி, இந்த நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதுடன், பொதுச் சொத்தின் கீழ் வரும் குற்றமாக இருப்பதால், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.