அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் ஆரம்பகட்ட விவாதங்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அடுத்த கட்ட ஆராய்வுக்காக சுமார் 50 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை முன்னாள் ஜனாதிபதிகள் அணுகி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் ஒன்று கூடியுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலுக்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
உரிமைகளை இரத்து செய்வது தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டாலும், அரசாங்கம் நினைப்பது போல் அதனை செயற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அடுத்த 14 நாட்களுக்குள் இந்த புதிய சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

