அரச வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கூறிய
கூற்றுகளை, முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardhana) மறுத்துள்ளார்.
தாம் ஒருபோதும் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமிக்கவில்லை அல்லது பொது
நிதியை தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தவில்லை என்று அவர்,
வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் பயன்பாடு
வெளிநாட்டு இராஜதந்திரிகளை வரவேற்க அரச நிதி பயன்படுத்தப்பட்டாலும், தமது
தனிப்பட்ட செலவுகள், தமது சொந்தப் பணத்தால் ஈடுகட்டப்பட்டன என்று அபேவர்தன,
அறிக்கை ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதிகப்படியான எரிபொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளையும் அவர்
நிராகரித்துள்ளார்.
தமது, பாதுகாப்பிற்காக மூன்று வாகனங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என்றும்,
எனினும் வழிகாட்டலை பின்பற்றியே, ஊழியர்களுக்கு கூடுதல் வாகனங்கள்
வழங்கப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
33.4 மில்லியன் ருபாய் என அறிவிக்கப்பட்ட எரிபொருள் செலவு “புள்ளிவிவர ரீதியாக
சாத்தியமற்றது” என்று கூறியுள்ள அவர், நாடாளுமன்றம், இதற்காக ஒரு சிறப்பு
கணக்காய்வை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.