நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த
நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள்
முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (24.09.02024) இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து
கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும்
கருத்து தெரிவித்த அவர்,
“அநுரகுமாரவும், ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார்.
அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக
அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்த காலங்களில்
முழுமையாக துணை நின்றது.
இனப்பிரச்சனை
ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் இறுதிப்போரில் மடிவதற்கு இந்த அமைப்பு
உதவி புரிந்தது. தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித்துள்ளனர்.
நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு
இனிமையாக இருக்கலாம்.
நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக
சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
நீங்கள் கனவு காண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த
நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.
அது எவ்வாறு
தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது. உங்களுக்கு அந்த
அருகதை கிடையாது. தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக் கொண்டு அந்த விருப்பங்களை
அங்கீகரிப்பதன் மூலமாக தமிழர்களை இந்த நாட்டின்
ஆட்சியில் பங்காளிகள் ஆக்குவதற்கு துணியவேண்டும்.
சுயநிர்ணய உரிமை
அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று புத்தபிரானையும் எமது
கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை
அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை
அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பினை கொண்டு வருவதனூடாக
இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின்
பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும்.
அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக
இறங்கவேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.