உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்திற்கு ஏழு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய எஸ்.ஐ. இமாம் மற்றும் ஏ.என்.ஜே டி அல்விஸ் அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழு நாட்களுக்குள் இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்த தவறினால் தாம் அவற்றை வெளியிடப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பணிப்புரை
இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் அநுர பானத்தில் மயக்கத்தில் இருக்கும் மக்களின் மயக்கம் தெளியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று (14.10.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையின் சில பக்கங்களைக் காணவில்லை எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருந்தார்.
இந்த அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போகவில்லை எனவும் அழிக்கப்படவில்லை எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அறிக்கை
இந்த வெளியிடப்படாத பகுதியில் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது தேசிய பாதுகாப்பு சம்பந்தமான முக்கியமான விடயம் என்பதனால் அறிக்கையை அம்பலப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதான சூத்திரதாரியை கண்டு பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்களும் வெளியிடப்படாத அறிக்கைகளை வெளியிடுமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த தேசிய மக்கள் சக்தியும் அறிக்கையை வெளியிடுமாறு கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தேடி இன்றிரவு எனது காரியாலயத்தை உடைக்க வேண்டாம் ஏனெனில் அறிக்கை இணையத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என உதய கம்மன்பில கூறியுள்ளார்.