புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் (Ganemulla Sanjeewa) மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிாகியுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவினால் (Colombo Crimes Division) குறித்த அறிக்கை இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, துப்பாக்கிச் சூட்டினால் மார்பு, கழுத்து, வயிற்றில் ஏற்பட்ட காயங்களாலேயே கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) தீர்ப்பளித்தார்.
இரண்டு நாள் விசாரணை
சம்பவம் தொடர்பான இரண்டு நாள் நீதவான் விசாரணையின் முடிவில் தலைமை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தீர்ப்பை அறிவித்த தலைமை நீதவான், விசாரணையின் போது செய்யப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரி சமர்ப்பித்த பிரேத பரிசோதனை அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த விசாரணை கொழும்பு தலைமை நீதவான் முன் அழைக்கப்பட்டபோது, இறந்த கணேமுல்ல சஞ்சீவவின் சகோதரி தில்ருக்ஷி சமரரத்ன சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.