மேற்கு ஜேர்மனியில் (West Germany) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்றையதினம் மாலை மேற்கு ஜெர்மனியின் சோலிங்கனில் (Solingen) நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், தொழில் நகரம் உருவாக்கப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நகரின் மையப் பகுதியில் நேற்றைய தினம் மாலை விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பாரிய தேடுதல் வேட்டை
இதன்போது அங்கு வீதிக்கு அருகில் இருந்த தாக்குதல்தாரி, அவ்வழியாகச் சென்றவர்களை கத்தியால் குத்திவிட்டு ஓடியதாகவும், இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடிக்க அப் பகுதியில் பாரிய தேடுதல் வேட்டை நடந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சாலைகள் தடை
இதேவேளை குறித்த தேடுதல் நடவடிக்கை காரணமாக சோலிங்கனில் சாலைகள் தடைபட்டுள்ளன.
மேலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதால் குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.