ருவாண்டா (Rwanda) ஆதரவு கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் காங்கோ நகரமான கோமாவுக்குள் நுழைந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோமாவின் முன்சென்ஸ் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில் பெண் கைதிகள் பலர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
பல ஆயிரம் ஆண்கள் சிறையிலிருந்து தப்பித்த நிலையில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி தீக்கிரையாக்கப்பட்டது என கோமா பகுதியில் செயல்படும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரத்தின் தகவல்கள்
ஜனவரி 27 ஆம் திகதி பகல் M23 கிளர்ச்சியாளர்கள் கோமா நகருக்குள் நுழைந்துள்ள நிலையில் அதன் பின்னர் நடந்த பயங்கரத்தின் தகவல்கள் கடும் பீதியை ஏற்படுத்துபவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
M23 கிளர்ச்சியாளர்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக விசாரணைக்கு என சிறைக்குச் செல்ல முடியவில்லை என ஐ.நா. அமைதி காக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
M23 கிளர்ச்சியாளர்கள் கோமாவைக் கைப்பற்றிய பிறகும் சுமார் 2,000 உடல்கள் கோமாவில் அடக்கம் செய்யக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான மக்கள்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கோமா நகரம் தற்போது M23 கிளர்ச்சியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
ருவாண்டா அதன் அண்டை நாட்டிலிருந்து அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றத் தீர்மானித்துவிட்டதாகவே அச்சம் எழுந்துள்ளது.
தற்போது தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுவை நோக்கி M23 கிளர்ச்சியாளர்கள் நகர்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இதனிடையே, கடுமையான எதிர்ப்பு எழுந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் M23 கிளர்ச்சியாளர்கள் தயங்குவார்கள் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.