பொலிஸ் திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகளை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பு
தற்போதைக்கு மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் தனித்தனியான குற்ற விசாரணைப் பிரிவுகள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் செயற்படுகின்றன.
அதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய மாகாணங்களிலும் அவ்வாறான தனித்தனியான மாகாண மட்டத்திலான குற்ற விசாரணைப் பிரிவுகளை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த குற்ற விசாரணைப் பிரிவுகள் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்படும்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மிக விரைவில் இதனை நடைமுறைக்குக் கொண்டு வர அரசாங்கம் உத்தேசித்துள்ளது.