வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பதன் பொருள் தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம்
மறுதலிக்கிறது என்பதே ஆகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (21.11.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிக்கப் போவதாக சொல்கிறார்கள். எல்லை
நிர்ணயத்திற்கு இன்னும் மூன்று நான்கு வருடங்கள் ஆகலாம்.
சாணக்கியன் கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள்.
அது பாராளுமன்றத்தில் இருந்து குப்பையில் போடப்பட்டு விட்டது.
மாகாண சபைத் தேர்தல்
பழைய முறையில் தேர்தல் நடத்தவும் அரசாங்கம் தயார் இல்லை. ஆனால் அவ்வாறு தயாராக
இருந்தால் அடுத்த வருடமே தேர்தலை நடத்த முடியும்.
ஒரு பக்கத்தில் அரசாங்கம் விரும்பினால் எல்லை நிர்ணயக் குழு பாராளுமன்ற
தெரிவுக்குழுவை நியமித்து செய்யலாம்.
ஆனால் பழைய மாதிரியான சட்டங்களின் கீழ்
தேர்தலை நடத்தி மாகாண சபையை கொண்டு வர வேண்டும். மாகாண சபை வராத பட்சத்தில்
அரசாங்கம் தான் விரும்பிய அனைத்தையும் ஆளுநர் ஊடாக செய்யும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இருக்கிற பொழுதே பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட
பலவற்றுக்கு எதிராக காத்திரமான செயற்பாடுகளை செய்யலாம்.
என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து
அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டியது நம்மைப் பொறுத்தவரை மாகாண சபை முறை
கொண்டுவரப்பட்டது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்காகவே. குறைந்தபட்சம்
வடக்கு கிழக்குக்காவது மாகாண சபைத் தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது
ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம்
மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள்” எனத் தெரிவித்துள்ளார்.

