2025இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்து
வருகின்ற நிலையில் அதற்கு தங்களது ஒத்துழைப்பும் இருக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5
மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக்
கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் நேற்றுமுன்தினம் (21.12.2024) திறந்து வைக்கப்பட்டது.
அதிகளவு நுகர்வோர்
இதன்போது கருத்துரைத்த ஆளுநர் ”யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் தூய்மையான நகரமாக இருந்தது. இன்று
மோசமாக இருக்கின்றது. தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள்
ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
மேலும், இந்த மீன் சந்தை மிகவும் கஷ்டப்பட்டே கட்டியதாகக் கூறினார்கள். இதை
எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில்தான் இது அமைக்கப்பட்டமையின்
வெற்றி தங்கியிருக்கின்றது.
இது உங்களுக்குரிய கட்டடம். இதை தூய்மையாக
வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு
பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான
வாய்ப்பும் இருக்கின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை
ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.