காசா பகுதியில் கடந்த சில மாதங்களில், ஹமாஸ் இயக்கத்துடன் ஏற்பட்ட மோதல்களில், இஸ்ரேல் ஆயுத உதவியுடன் உருவான பாலஸ்தீன அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 10 அன்று, யாசர் அபு ஷாபாப் தலைமையிலான குழு மற்றும் ஹமாஸ் உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.யாசரை பாதுகாக்கும் முயற்சியில் ஏற்பட்ட மோதலில், பலர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் ஆதரவு அமைப்பு
இஸ்ரேலின் ஆதரவுடன் இயங்கும் “பொபுயுலர் ஃபோர்ஸஸ்”(Popular Forces) எனப்படும் குழு, இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் தாக்குதலில் யாசரின் உறவினர்கள் உட்பட சுமார் 50 வீரர்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளது.

மேலும், வெடிபொருட்கள் அகற்றும் பணியில் இருந்தவர்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையதாகக் கூறி ஹமாஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. ஆனால் 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போது, அபு ஷாபாப் சிறையிலிருந்து தப்பித்துள்ளார்.
காசாவின் துரோகி
தற்போது, இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற அவரின் குழுவில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து கிழக்கு ரஃபா பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்.

அபு ஷாபாப் சமூக ஊடகங்களில் “காசாவின் துரோகி” எனக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அவரை அழிக்க ஹமாஸ் தங்கள் திட்டத்தை பொதுவெளியில் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் வழங்கும் ஆயுத உதவியால், காஸாவில் உள்ளபடியே ஹமாஸ் மற்றும் பாப்புலர் ஃபோர்ஸஸ் இடையே உள்நாட்டு மோதல் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

