இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் (Hamas) அமைப்பினா் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பு ஏவுகணைகளை வீசியுள்ளது இதுவே முதல்முறையாகும்.
இராணுவப் பிரிவு
காசாவில் (Gaza)ஏராளமான பொதுமக்களைக் கொன்று குவித்த இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த ஏவுகணை வீச்சை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல் அவிவ் மற்றும் அதன் புகா் பகுதிகளைக் குறிவைத்து இரண்டு ‘எம்90’ வகை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினோம்.
யூத ஆக்கிரமிப்புவாதிகள் காசாவில் நடத்திய படுகொலைகளுக்கும் பொதுமக்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அலைக்கழிப்பதற்கும் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயா் அகதிகள்
காசாவின் அல்-தபாயீன் பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை (10) நடத்திய தாக்குதலில் சுமாா் 100 புலம்பெயா் அகதிகள் உயிரிழந்தனா்.
அந்த கட்டடம் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் இராணுவ தளமாகப் பயன்படுத்தப்பட்டுவந்ததாக இஸ்ரேல் கூறினாலும், பொதுமக்களின் உயிரிழப்பு அதிகமாக்கும் விதமாக வேண்டுமென்றே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.