கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி (Gary Anandasangaree) யாழிற்கு (Jaffna) விஜயம் செய்துள்ளார்.
கனடாவின் முதலாவது ஈழத்தமிழ் அரசியல்வாதியாகவும் மற்றும் கனடிய நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஈழத்தமிழ் அமைச்சராகவும் காணப்படுகின்ற ஹரி ஆனந்த சங்கரியின் குறித்த இலங்கை விஜயம் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் வடக்கு அரசியல் குறித்து தொடர்ச்சியான அரசியல் வட்டாரங்களில் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவரின் வருகை அதில் எந்தவகையிலாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
யாழ் விஜயம்
முடிக்குரிய பூர்வீகக் குடிகள் உறவுகளுக்கான அமைச்சராக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு அண்மையில், அமைச்சுப் பொறுப்பும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சுப் பொறுப்பும் மேலதிகமாக வழங்கப்பட்டது.
இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை என கனேடிய நாடாளுமன்றத்தில் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது மாத்திரமன்றி இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆகியவர்களுக்கு பொருளாதார மற்றும் பயணத்தடை விதிக்க வழிவகுத்தார்.
இந்தநிலையில், ஹரி ஆனந்தசங்கரியின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது.
இது தொடர்பில் தனது, எக்ஸ் தளத்தில் ஹரி ஆனந்த சங்கரி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த பதிவில், “அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும் போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரி செய்யாது.
இலங்கை விசா
கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.
நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது எங்களை மௌனமாக்க முடியாது” என அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பிண்ணனியில் தற்போது இவரது இலங்கை விஜயம் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் அரசியல் வட்டாரங்கள் இடையே பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதுடன் ஹரி ஆனந்த சங்கரிக்கும் பிரபல தொழிலதிபரும் ஐபிசி குழுமத் தலைவருமான கந்தையா பாஸ்கரனுக்கும் (Baskaran Kandiah) இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், அண்மையில் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறீதரன் (S. Sridharan), அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.