பலஸ்தீனத்துக்கு (Palastine) ஆதரவாகச் செயற்படும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல்லாவின் (Hezbollah) பெருமளவான ஆயுதங்கள் லெபனானிலுள்ள விமான நிலைய மொன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், லெபனானிலுள்ள பெய்ரூட் (Beirut) சர்வதேச விமான நிலையத்தில் ஹிஸ்புல்லாவின் வெடிபொருட்கள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பாலிஸ்ரிக் ஏவுகணைகள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறான பெரிய பெட்டிகள் வருவதையும், உயர்மட்ட ஹிஸ்புல்லா தளபதிகள் அதிக அளவில் இருப்பதையும் தாங்கள் அவதானித்ததாக விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ இலக்கு
அதுமட்டுமல்லாது, நகர மையத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Rafic Hariri International Airport) ஒரு பெரிய இராணுவ இலக்காக மாறக்கூடும் என்று தொழிலாளர்கள் மேலும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், இந்த கூற்றுக்கள் அனைத்தும் பொய் என லெபனான் விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.