2024 பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின்
வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடக் கோரி,
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை
பரிசீலிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நீதியரசர்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக டி சில்வா மற்றும் சம்பத்
பி. அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று உறுப்பினர்களைக்
கொண்ட அமர்வு இன்று(06) எடுத்த முடிவின்படி, இந்த அடிப்படை உரிமைகள் மனு, 2025,
செப்டம்பர் 30 அன்று பரிசீலிக்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் தலைவர், களுத்துறை மாவட்ட தேர்தல் அதிகாரி,
2024 பொதுத் தேர்தலில் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில்
பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரின் கோரிக்கை
கடந்த பொதுத் தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும்
செயல்பாட்டில் ஏற்பட்ட முறைகேடுகளே, தாம் நாடாளுமன்றத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுத்ததாக மனுதாரரான ராஜித, கூறியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினருக்கும் தனக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 119 வாக்குகள் மட்டுமே
என்றும், முறைகேடுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கவும்,
கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில், புதிய ஜனநாயக
முன்னணியின் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை
மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் பிரதிவாதிகளுக்கு
உத்தரவிடுமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.