பங்களாதேஷின் முன்னான் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) அரண்மனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் அவர் நாடுகடத்தப்பட வேண்டிய எழுச்சியின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் மாற்றியமைக்கப்படவுள்ளது.
இந்த அருங்காட்சியகம், ஷேக் ஹசீனாவின் பதவியை கவிழ்க்க வழிவகுத்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில் காணப்படும் என பங்களாதேஷின் (Bangladesh) காபந்து அரசின் தலைமை ஆலோசகருமான முகமது யூனுஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவின் அரண்மனை
பங்களாதேஷில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்போதிருந்த அரசுக்கு எதிராக நடைபெற்ற பாரிய போராட்டத்திற்கு பின்னர் ஓகஸ்ட் 5ஆம் திகதி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
அவர் தப்பித்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது முன்னாள் இல்லமான கணபபன் அரண்மனையை முற்றுகையிட்டு தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அந்த அரண்மனையில், கண்ணாடிகளின் இல்லம் என்றும் அழைக்கப்படும் மோசமான அய்னகர் தடுப்பு மையத்தின் பிரதியும் உள்ளது.
அங்கு கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பங்களாதேஷ் புரட்சி
இதற்கமைய, ஆட்சியில் நடந்த அநீதிகளை அம்பலப்படுத்தும் விதமாக இந்த அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றவுள்ளதாகவும் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
அருங்காட்சியகத்தின் கட்டுமானம் டிசம்பரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை (Sri Lanka) – பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் (Colombo) அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் கடந்த 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.