ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடர்
இலங்கைக்குப் பாதிப்பாக அமையாது என்று அநுர அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்
இலங்கையில் பல்வேறு சந்திப்புகளையும் விஜயங்களையும் ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையாளர் வோல்கர் டர்க் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அரச தரப்பினருடனான சந்திப்புகளில், இஸ்ரேல் – ஈரான் மோதல் உட்பட
இலங்கையின் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடி
இருந்தார்.
இது குறித்து அநுர அரசின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம்
குறிப்பிடுகையில்,
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம்
இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத் தொடரின்
போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள்
இடம்பெற்று வருகின்றன.
வோல்கர் டர்க்கின் விஜயம்
பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித
உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ளன. இருப்பினும் ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை
ஆராய்ந்து சென்றுள்ளார்.

அவர் வழங்கிய உத்தரவாத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித
உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடர் இலங்கைக்குச் சாதகமாகவே அமையும்.
ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளின் இலங்கை
விஜயங்களின் போது இதற்கு முன்னர் இருந்த அரசுகளைப் போன்று அல்லாது தற்போதைய
அரசு செயற்பட்டிருந்தது.
எமது விஜயத்தின் நோக்கங்களைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் செயற்கையாக
எதனையும் செய்யவில்லை என்பது ஆணையாளரின் நிலைப்பாடாக இருந்தது.
அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளில் மாத்திரமே ஒழுங்கிணைப்பு ரீதியாக அரசு
பங்களிப்பு செய்தது.
ஏனைய சந்திப்புகள் மற்றும் விஜயங்களில் அரசு
தலையிட்டிருக்கவில்லை. எனவே, இலங்கையின் தற்போதைய அரசு நேர்மையாகச்
செயற்பட்டது என்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறிச் சென்றுள்ளார்.
மேலும் இலங்கை வந்த முதல் நாளில் இடம்பெற்ற அரச உயர் மட்டத்தினருடனான
சந்திப்பின் போது, இஸ்ரேல் – ஈரான் மோதல் மூன்றாம் உலகப் போராக மாறினால்
ஐக்கிய நாடுகள் சபையின் இருப்புக்கே பாதிப்பாகி விடும் என்று ஆணையாளர்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது” என்றார்.

