இலங்கையை (Sri Lanka) சீரழிப்பதற்கு நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
மாறாக, நாட்டு மக்களினதும் அரச நிர்வாகத்துக்கும் பயனுடையதாக அமையும் வகையில் தான் நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்தது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (8) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நட்பு நாடான இந்தியா
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ச, ‘‘2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இயற்றப்பட்டுள்ள சிறந்த சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த உறுதியான, தகைமையான தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களுக்கு உண்டு.
வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர் இலங்கைக்கு முதலாவதாக எமது நட்பு நாடான இந்தியாவே 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது. இதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டோம்.
2022 ஆம் ஆண்டு நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை கோரிய போது ‘ இலங்கை எங்களை 16 தடவைகள் ஏமாற்றிய நாடு, ஆகவே இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. ஊழல், மோசடி, ஆட்சி செய்யும் நாடு’ என்று நாணய நிதியம் குறிப்பிட்டது.
அரசியல்வாதிகள்
இவ்வாறான நிலைக்கு மீண்டும் இலங்கை செல்லாது என்று நாணய நிதியத்துக்கு வாக்குறுதியளித்தோம். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற பல நிபந்தனைகளை நாணய நிதியம் முன்வைத்தது.
அரச நிறுவனங்களை விற்பனை செய்யுமாறு நாணய நிதியம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களுக்காகவே அரச நிறுவனங்கள் விற்கப்படுகிறது.
நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமுடையதாக்குமாறு மாத்திரமே குறிப்பிடப்பட்டது. இலாபமடையும் அரச நிறுவனங்களை விற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதனை ஏற்க முடியாது.“ என குறிப்பிட்டுள்ளார்.