உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் (Sri Lanka) மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ (Hazarely Fernando) குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மரணங்களின் எண்ணிக்கை
உலக நாடுகளில் மார்பகப் புற்றுநோய் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. ஆனால் இலங்கையுடன் ஒப்பிடும்போது உலகில் முன்கூட்டியே குறித்த நேயை கண்டறிதல் அதிகமாக உள்ளது.
எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் சதவீதம் அதிகரித்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், சுமார் 5,500 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய் விழிப்புணர்வு
அதேவேளை, இலங்கையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மார்பக சுய பரிசோதனை செய்வது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மையம் நாரஹேன்பிட்டியில் உள்ளதாகவும் இரத்தினபுரி (Ratnapura), யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் மாத்தறை (Matara) வைத்தியசாலைகளிலும் ஆரம்பகால புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை நிலையங்கள் நடைபெறுவதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 01 முதல் 31 வரை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும்.
இந்த ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் கருப்பொருள் ‘மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது’ என்பதாகும்.