வெகுவிரைவில் சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் ஹரணி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலவச கல்வி
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சுதந்திரத்துக்கு பின்னராக 75 வருட காலத்தையும் நாங்கள் விமர்சிக்கவில்லை. அரசியல் கட்டமைப்பையே சாபம் என்கிறோம். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவற்றால் பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள்.
ஆசிய வலய நாடுகளில் இலங்கையின் பெண்களின் கல்வி தரம் முன்னிலையில் உள்ளது.
பாரிய போராட்டத்தின் மத்தியில் தான் இலவச கல்வி உரிமை பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக பெண்கள் போராடி இன்று சகல துறைகளிலும் முன்னணியில் உள்ளார்கள். இந்த முன்னேற்றத்தை வலுப்படுத்த வேண்டும்.
கல்வித்துறையை பொறுத்தவரையில் தற்போது ஆண்களின் கல்வி நிலை பின்னடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இது பாரியதொரு பிரச்சினையாகும்.
ஆண்- பெண் சமத்துவ நிலை
கல்வித்துறையின் ஊடாகவே ஆண் – பெண் சமத்தவத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே ஆண்களின் கல்வி நிலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.
சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும்.
அரசியலமைப்பு பேரவைக்கு இந்த ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெகுவிரைவில் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.
மகளிர் மற்றும் சிறுவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் விசேட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குவதன் ஊடாகவே ஆண்- பெண் சமத்துவ நிலையை மேம்படுத்த முடியும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.