ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் எவ்வித இரகசிய
ஒப்பந்தமோ – இணக்கப்பாடோ இல்லை.
கடந்த ஆட்சிக் காலங்களில்தான் எதிர்க்கட்சிகள்
அரசுடன் இரகசியமாகக் கூட்டணியமைத்தன. ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறு எவரும்
செயற்படவில்லை. அரசுக்கு எதிரான நுகேகொடைப் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி
கலந்துகொள்ளாவிடினும் அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக நிச்சயம்
குரல் கொடுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி
தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புப் பேரணியால் அரசு சற்று அச்சம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தமக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில்
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில்
போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தயாராகியுள்ளன.
எவ்வாறிருப்பினும் அந்த எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை எனப்
பிரதான எதிர்க்கட்சியாக நாம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருக்கின்றோம்.

எனினும், எதிர்க்கட்சிகளை முடக்கும், அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு
எதிராக நாம் நிச்சயம் குரல் கொடுப்போம்.
அந்தப் போராட்டத்தில் பங்கேற்றாவிட்டாலும், அதற்கான ஆதரவை வழங்குவோம்.
அரசுக்கு எதிராக நுகேகொடையில் மாத்திரமின்றி, நாடளாவிய ரீதியில்
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சித் தலைமைத்துவத்தின் தீர்மானங்களை ஏற்று
அதற்கமையவே செயற்படுவோம் என்ற உறுதி மொழிக்கமையவே நாம் செயற்படுவோம்.
நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியால் அரசு சற்று
அச்சமடைந்துள்ளது எனத் தெரிகின்றது.
திரைமறைவில் இரகசிய கூட்டு
அரசு கூறிய அனைத்து பொய்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களும் அவற்றை உணர
ஆரம்பித்துள்ளனர்.
ஓராண்டு என்ற குறுகிய காலத்துக்குள் மக்களிடமிருந்து
கிடைக்கப் பெற்ற ஆணையை அரசு இழந்துள்ளது.

அந்தவகையில் இந்த அரசின் இயலாமையை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கு ஐக்கிய
மக்கள் சக்தி பொறுத்தமான நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.
எதிர்வரும் 21ஆம்
திகதி எதிர்ப்புப் பேரணி வெற்றியை முழு நாடும் அறிந்துகொள்ளும்.
இந்த அரசுடன் எமக்கு எவ்வித இரகசிய ஒப்பந்தமோ – இணக்கப்பாடோ இல்லை.
எதிர்க்கட்சிகள் அரசுடன் திரைமறைவில் இரகசிய கூட்டு அமைத்துள்ளதாயின், நாம்
அமைதியாகவே இருப்போம். மாறாக அரசுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
கடந்த ஆட்சி காலங்களில்தான் எதிர்க்கட்சிகள் அரசுடன் இரகசியமாகக்
கூட்டணியமைத்தன.
ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறு எவரேனும் செயற்பட்டால், உரிய நேரத்தில்
மக்கள் அதற்குத் தக்க பதிலை வழங்குவர். ஆனால் அவ்வாறு எவரும் செயற்பட
மாட்டார்கள் என்று நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

