‘சிச்சியின் ராக்கெட்’ என்று பரவலாக அறியப்படும் சுப்ரீம் SAT திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியாவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள நிறுவனத்தால் ஈட்டப்பட்ட வருவாய் குறித்த விவரங்களை பிரதமர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வழங்கினார்.
இருப்பினும், புள்ளிவிவரங்கள் தவறானவை என்று அமைச்சர் சமரசிங்க பின்னர் தெளிவுபடுத்தினார், தரவுகள் பிரதமருக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டவை என்றும் அவை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்றும் வலியுறுத்தினார்.
துல்லியமான தகவல்
இதன்படி “பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போது, துல்லியமான தகவல்களை வழங்குவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த தவறு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் சரியான உண்மைகள் பகிரப்படுவதை உறுதி செய்வதற்காக நான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன்,” என்று சமரசிங்க செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அரசாங்கம் பிழையைக் கண்டறிந்துள்ளதாகவும், இந்தத் தகவல் அதிகாரிகளிடமிருந்து உருவானது என்றும், மேலும் ஆராயப்படும் என்றும் பிரதமர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.