தான் கொல்லப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், தனது பதவிக்கு மாற்றாக வரக்கூடிய அடுத்த தலைவரை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ali Khamenei – Supreme Leader of Iran) முன்னெச்சரிக்கையாக தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் (Israel) ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரானும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதனால் இருதரப்பிலும் பல உயிரிழப்புகளும், மிகுந்த சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் இலக்காகக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
“அலி கமேனி உயிருடன் இருக்கக்கூடாது,அவரை மையமாகக் கொண்டு நாங்கள் தாக்கும் இலக்குகளைத் தீர்மானித்துள்ளோம்” என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) சமீபத்தில் கூறியிருந்தார்.

தற்போது பாதுகாப்புக்காக ஒரு பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள அயதுல்லா கமேனி, தனது மரணத்திற்குப் பிறகு நாட்டை வழிநடத்தக்கூடிய மூன்று மதகுருக்களின் பெயர்களை பட்டியலிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்தப் பட்டியலில் அவரது மகன் மொஜ்தபாவின் பெயர் இடம்பெறவில்லை என்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய உச்ச தலைவர்
இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தன்னை கொல்லும் சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்ந்ததாலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக ஈரானிய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாதாரண சூழ்நிலைகளில் ஒரு புதிய உச்ச தலைவரை நியமிக்கக் கூடிய செயல்முறை பல மாதங்கள் எடுக்கும். இதில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெறும், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும்.
ஆனால் தற்போது நாடு போர் சூழ்நிலையில் உள்ளதால், இஸ்லாமிய குடியரசின் அரசியல் மரபை பாதுகாக்கும் நோக்கில், விரைவான பதவி மாற்றத்தைக் கமேனி திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹமாஸுடன் ராணுவ ஒருங்கிணைப்பில் இருந்த ஓர் உயர்மட்ட ஈரானிய அதிகாரி மற்றும் இரு ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் தென்மேற்கு ஈரானில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகள் இஸ்ரேலின் போர் விமானங்கள் மூலம் தாக்கப்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/XcHr228_c6U

