இஸ்ரேல் (Isael) மீது ஈரான் (Iran) தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் உள்ள உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை சேமித்து வைத்திருக்குமாறும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு பாதிப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானிய தாக்குதல்களினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
காசா பகுதி மற்றும் லெபனான் மீது தொடர்ச்சியாக வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (01) பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இராணுவ இலக்கு
குறித்த தாக்குதலானது, மக்கள் அடர்த்தி கொண்ட தலைநகரான டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்டது.
எனினும், இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும், அமெரிக்காவின் எதிர் ஏவுகணை நடவடிக்கையின் மூலம் அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் முறியடித்தது.