இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக அவர் வோஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயணம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து இருப்பதனால் நெதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி
தற்போதைய தகவல்களின் படி பயணம் செய்தால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நெதன்யாகு காணப்படுகிறார்.
முன்னதாக இஸ்ரேலுக்கு தற்காப்பு கருவிகள் வழங்கியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு பெஞ்சமின் நெதன்யாகு ஜனவரி 26ஆம் திகதி நன்றி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இது குறித்த தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் நெதன்யாகு “இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நமது பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளவும், அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான கருவிகளை வழங்குவதாக நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.