மத்திய காசாவின் இரண்டு அகதி முகாம்கள் மீது இஸ்ரேலிய (Israeli) படையினர் விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று (18) நடத்திய தாக்குதலில் 17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரபாவில் அகதி முகாமில் தங்கியிருக்கும் 01 மில்லியன் அகதிகள் மீது பல்வேறு பகுதிகளில் இருந்து பீரங்கிகளில் இருந்தும் போர் விமானங்களில் இருந்தும் “குண்டுகள் மழைபோலப்” பொழிந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான எதிர்ப்பு
இந்த நிலையில், “உலக நாடுகளின் எந்தவொரு தலையீடும் இன்றி ரபா நகர் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கப்படுகிறது. இஸ்ரேலியப் படை அங்கு சுதந்திரமாக தாக்குதலில் ஈடுபடுகிறது,”
கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துவிட்டது. கடுமையான எதிர்ப்பு கிளம்பினாலும் அதனை அவர்கள் சமாளிக்கிறார்கள். ஆக்கிரமிப்பு என்பது முறைகேடான செயல். நகரத்தையும் அகதி முகாமையும் அவர்கள் அழிக்கிறார்கள்,” என்று ரபா நகர் குடியிருப்புவாசி ஒருவர் கைபேசி வாயிலாக குறித்த சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு
குறிப்பாக, ரபாவின் மேற்கு வட்டாரத்தில் அல்-சுல்தான் (Tel al-Sultan) , அல்-இஸ்பா ( Al-Izba), ஸுருப் (Zurub) ஆகிய பகுதிகளிலும் நகரின் மையப் பகுதியில் உள்ள ஷாபோராவிலும் பீரங்கிக் குண்டுகள் மூலம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும், எகிப்துடனான எல்லைப் பகுதியையும் முக்கியத்துவம் வாய்ந்த ரபா எல்லை கடக்கும் பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.