“இஸ்ரேலில்” புதிய அரசியல் – பாதுகாப்பு புயல் உருவாகியுள்ளதாக மொசாட் அமைப்பை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மொசாட் தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமனம் செய்யப்படுவதை அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, கோஃப்மேன் மற்றும் சாரா நெதன்யாகு இடையே நடந்த நீண்ட தனிப்பட்ட சந்திப்பானது ஊடகம் ஒன்றில் செய்தியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்ட இந்த செய்தி, “இஸ்ரேலிய” பாதுகாப்பு அமைப்புக்குள் கடுமையான விமர்சனத்தையும் கவலையையும் தூண்டியுள்ளது.
தற்போது நெதன்யாகுவின் இராணுவச் செயலாளராக உள்ள ரோமன் கோஃப்மேன், ஜூன் 2026 இல் மொசாட் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார்.
சாரா நெதன்யாகுவின் தலையீடு
இந்நிலையில் சாரா நெதன்யாகு உயர்நிலை பாதுகாப்பு நியமனங்களில் ஈடுபடுவது முதல் முறை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னும் பின்னும் நடந்த சில முக்கிய பதவிகளுக்கான முடிவுகளில் அவரது செல்வாக்கு இருந்ததாக முன்பு ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மொசாட் நியமன அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த கோஃப்மேன் – சாரா நெதன்யாகு சந்திப்பு, அதன் நேரம் காரணமாகவே கூடுதல் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மொசாட் தரப்பினர் பலரும் இந்த நியமனம் திடீரென எடுக்கப்பட்டதாகவும், “ஆச்சரியமானது” என்றும் கூறியுள்ளனர்.
முந்தைய சர்ச்சைகள்
இந்த விவகாரம் 2012 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தையும் நினைவுகூறுகிறது.
அப்போது பிரிகேடியர் ஜெனரல் கை சூர், அதிகாரப்பூர்வ நேர்காணலுக்காக அழைக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக சாரா நெதன்யாகுவால் கேள்வி – பதில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், அவர் கேட்ட கேள்விகள் முக்கியமற்றவை என்றும், அதற்குப் பிறகு தான் இராணுவச் செயலாளராக நியமனம் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டதாகவும் சூர் தெரிவித்திருந்தார்.
பெஞ்சமின் நெதன்யாகு தன் மனைவியின் ஈடுபாட்டைக் காக்கும் வகையில், “அவள் எல்லாவற்றிலும் பங்குதாரர்” என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

