தமிழரசுக்கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற30 பேரில் 27 பேர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadas) ஆதரவு வழங்குவதான நிலைப்பாட்டில் இருந்தமையாலே இதனை மத்திய குழு தீர்மானமாக அறிவித்துள்ளோம் என கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டமானது, இன்று(1) வவுனியாவில் இடம் பெற்றது.
மத்திய குழு கூட்டத்தின் பின்னர், தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய
நிலையில் கட்சிக்குள் தலைவர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான
கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மத்திய குழு கூட்டம்
இது தொடர்பில் கட்சியின் செயலாளரிடம் கேட்டபோது,
“தமிழரசு கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது நிலைப்பாடு தொடர்பில்
தெரிவிக்க வேண்டிய கடப்பாடு காணப்பட்டது.

இதன் பிரகாரம் நான்காம் திகதி தபால்
மூல வாக்களிப்பு இடம்பெற உள்ள நிலையில் அதற்கு முன்னராக எமது கட்சியின்
நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க
கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை இன்று கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அனைவருக்கும் கடிதம்
அனுப்பப்பட்டதோடு தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கட்சியின் நிலைப்பாடு
குறித்த கடிதத்தின் பிரகாரம் அம்பாறை உட்பட மத்திய குழு உறுப்பினர்கள்
இருக்கும் அனைத்து பிரதேசங்களிலும் அவர்களுக்கு கடிதங்கள் கிடைத்திருந்தது.

மட்டக்களப்பில் இருந்து ஸ்ரீநேசன் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள
முடியாது என தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தார்யுகேந்திரனுக்கு தபால்
கிடைக்காததன் காரணம் தெரியவில்லை.
இதேவேளை வெளிநாடு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது நிலைப்பாடு
தொடர்பில் ஏற்கனவே கட்சி செயலாளர் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை எனக்கு
தெரிவித்து இருந்தார்.
சிவஞானம் தலைமையில் கூட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் இன்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்க
வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக தனது நிலைப்பாடு தொடர்பில் மத்தியகுழுவுக்கு
தெரியப்படுத்துமாறு என்னிடம் தகவல்களை தெரிவித்து இருந்தார்.

இவ்வாறான சூழலில் எமது கட்சியின் தலைவர் குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக
தெரிவித்திருந்த போதிலும் இன்று காலை தனக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கலந்து
கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எமது கட்சியின் மூத்த துணை தலைவர் சி வி கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) தலைமையில்
கூட்டம் நடத்தப்பட்டது.
மத்திய குழு தீர்மானம்
தலைவர் இல்லாத இடத்தில் கட்சியின் மூத்த உப தலைவரை கொண்டு கூட்டத்தினை
நடத்துவதற்கான அனுமதி இருப்பதன் காரணமாக குறித்த கூட்டம் நடத்தப்பட்டு
இருந்தது.

இன்று கலந்துகொண்டவர்களில் மூவர் வரையில் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு
தளத்தில் தமது கருத்தினை வெளிப்படுத்தி இருந்த போதிலும் ஏனையோர் கட்சி
அறிவித்த நிலைப்பாட்டில் காணப்பட்டிருந்தனர்.
எனவே 41 பேரில் 30 பேர் பங்கேற்று அதில் சுமார் 27 பேர் வரையில் சஜித்
பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆன நிலைப்பாட்டில் இருந்ததன் காரணமாக எமது
கட்சி இதனை மத்திய குழு தீர்மானமாக அறிவித்து இருந்தது” என அவர்
தெரிவித்தார்.

