சுமந்திரனின் ஆதிக்கத்தால் இலங்கை தமிழரசு கட்சி குருவீச்சை பிடித்த மரமாகவே
உள்ளது என
அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (14) வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு
கட்டுரையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சிக்குள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான சுமந்திரனின் பிடி
இறுக்கமாக இருப்பதினால் புதிய தமிழரசுக்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியும்
திரை மறைவில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழரசுக்கட்சி
“தந்தை செல்வா தமிழரசுக்கட்சி”
என அதற்குப் பெயரிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமந்திரன்
தலைமையுடன் அதிருப்தியுற்ற தமிழரசுக்கட்சியினர் அனைவரையும் இணைக்கவும்
முயற்சிகள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் பரபரப்பு தமிழ்ப்பகுதிகளிலும் சூடுபிடிக்க
தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் போட்டி போட்டுக்
கொண்டு வேட்பாளர்களை தேடுகின்றன.
இளைஞர்களையும், பெண்களையும், வேட்பாளர்
பட்டியலில் இணைப்பது தான் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும் கடும்
பிரச்சனையாக உள்ளது.
தேர்தல் சட்டப்படி 35 வீத இளைஞர்களும், 25 வீத பெண்களும் வேட்பாளர்
பட்டியலில் இருக்க வேண்டும்.
தேர்தல் அணிச் சேர்க்கைகளுக்கான முயற்சிகளும்,
மும்மரமாக இடம்பெறுகின்றன. ஆனாலும் உறுதியான தீர்மானங்களை இன்னமும் காண
முடியவில்லை.
தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடுவது என்ற நிலை ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள பழைய கூட்டமைப்புக்கட்சிகளை இணைக்க
முயற்சித்தாலும் அம் முயற்சி கைகூடவில்லை.
மீண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக இயங்குவதற்கே அழைப்பு விடுக்கப்பட்டது.
தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள் பெரியண்ணன் பாணியில் செயற்படலாம் என்ற
நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்த நோக்கத்தை நன்கு புரிந்து கொண்டதால்
நழுவியுள்ளனர். நாங்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறவில்லை தமிழரசுக்கட்சி தான்
வெளியேறியது.
நாங்கள் தற்போது மகா கூட்டணியாக இயங்குகின்றோம்.
இலங்கை தமிழரசுக்கட்சி வேண்டுமென்றால் தங்கள் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம்
என அவர்கள் பதிலளித்துள்ளனர். இது தமிழரசுக்கட்சியின் பெரியண்ணன் பாணிக்கு
இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தமிழரசுக்கட்சி இதனை தவிர்த்துக் கொண்டது.
தமிழரசுக்கட்சி அழைத்தவுடன் ஓடிப்போய்ச் சேருவதற்கு அக்கட்சி காய்த்துக்
குலுங்கும் மரமாக இன்று இல்லை. குருவிச்சை பிடித்த மரமாகவே உள்ளது.
சுமந்திரனின் தனிநபர் ஆதிக்கத்தினால் கட்சி இன்று மிகவும் பலவீனமாகியுள்ளது.
வடக்கில் எந்த உள்;ராட்சிச் சபைகளையும் தனித்துக் கைப்பற்றும் நிலையில்
அக்கட்சி இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலை விட குறைந்தளவான வாக்குகளைப் பெற்றுக்
கொள்வதற்கே சாத்தியங்கள் உள்ளன. எந்த கட்சியும் தமிழரசு கட்சியுடன் இணைவதற்கு
இன்று தயாராக இல்லை.
கிழக்கில் தமிழரசுக்கட்சி ஒருவாறு தன்னை தக்க வைத்துக் கொள்ளும். அங்கு
தேசிய மக்கள் சக்தி வலுவான போட்டியாளனாகவே அதற்கு இருக்கும். ஏனைய
தமிழ்க்கட்சிகள் கிழக்கில் பெரிய செல்வாக்குடன் இல்லை.
உள்ளூராட்சிசபைத் தேர்தல்
கிழக்கின் சமூகக்
கட்டமைப்பு ஏனைய கட்சிகள் செல்வாக்குப்பெறுவதற்கு அங்கு இடம் கொடுக்கவில்லை.
ஆனாலும் தமிழ் அரசியலுக்கு யாழ்ப்பாணமே தலைமை தாங்குவதால் யாழ்ப்பாணத்தில்
ஏற்படும் பாதிப்புகள் காலப்போக்கில் கிழக்கிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த விந்தன் கனகரத்தினம் தமிழரசுக்கட்சியில்
இணைந்த போதும் அது பெரியளவிற்கு தேர்தல் முடிவுகளில் பாதிப்பு செலுத்தப்
போவதில்லை.
சுமந்திரன் தலைமையுடன் அதிருப்தியுற்ற தமிழரசுக்கட்சியினர் அனைவரையும் இணைக்கவும்
முயற்சிக்கப்படுகின்றது. சுமந்திரன் அதிருப்தியாளர்களும், புலம்பெயர்
தரப்பினரும், இந்திய சக்திகளும் கூட்டாக இதற்கான முயற்சிகளை செய்கின்றனர்
என்றும் செய்திகள் வருகின்றன.
சத்தியலிங்கத்தையும் , சாணக்கியனையும் தவிர ஏனைய 6 நாடாளுமன்ற
உறுப்பினர்களும் புதிய தமிழரசுக்கட்சியுடன் இணைவார்கள் என்றும் செய்திகள்
தெரிவிக்கின்றன. அக்கட்சி உருவாக்கத்தின் பின்னர் ஏனைய கட்சிகளுடன் இணைந்து
கூட்டாக செயல்படும் நோக்கமும் அதற்கு உண்டு. அதற்கு முன்னோட்டமாகவே தவராசா
தலைமையிலான ஜனநாயகத் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது.
புதிய
தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் மகா கூட்டணி ஒன்றும் உருவாகலாம்.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறும் புதிய கட்சிகளுடன் இணைந்து மகா
கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதில் கூட்டமைப்பில் இருந்த ஐந்து கட்சிகளுடன்
புதிதாக சந்திரகுமாரின் சமத்துவக்கட்சி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை
இயக்கம், விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி , தவராசாவின் ஜனநாயகத்
தமிழரசுக் கட்சி என்பனவும் இணைந்து செயல்படப் போவதாக செய்திகள்
வந்திருக்கின்றன.
இரண்டு கலந்துரையாடல்களும் இது தொடர்பாக இடம்பெற்றிருந்தன.
எனினும் சந்திரகுமாரின் கட்சி இணைக்கப்பட்டதை புதிய தரப்புக்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை. குறிப்பாக ஐங்கரநேசனின் கட்சியும், விக்கினேஸ்வரனின் கட்சியும்
அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. இறுதியில் முயற்சி பிசுபிசுத்துப்
போனது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், தமிழ்மக்கள் கூட்டணி, ஜனநாயகத்
தமிழரசுக்கட்சி என்பன கூட்டில் சேரும் முயற்சியை கைவிட்டு வெளியேறியுள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணிக்கு சந்திரகுமாரின் பிரசன்னத்தை தவிர யாழ்மாநகர சபை
மேயர் வேட்பாளராக சட்டத்தரணி மணிவண்ணனை நிறுத்த வேண்டும்.
10 வட்டாரங்கள்
தமக்கு தரப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்கப்படாமையும் பிரச்சினையாக
இருந்தது. விலகலுக்கு இவையும் காரணங்களாக அமைந்தன. மணிவண்ணன் மேஜராக
கடமையாற்றி சில பணிகளை செய்து காட்டியதால் அவர் மேயர் பதவிக்கு பொருத்தமானவர்
என்ற கருத்தும் பலரிடம் காணப்படுகின்றது.
ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சந்திரகுமாரின் கட்சி இணைக்கப்படுவதற்கு
சுமந்திரன் தான் காரணம் என்றும் செய்திகள் வருகின்றன. புளொட் முக்கியஸ்தர்
கஜதீபனின் வீட்டில் சித்தார்த்தன், சுமந்திரன், கஜதீபன் சந்தித்து இந்த முடிவை
எடுத்ததாக தகவல் ஒன்று உண்டு.
ஜனநாயகத்தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்
சித்தார்த்தன் முக்கிய வாக்கு வங்கியாக இருப்பதால் ஏனைய கட்சிகள்
இம்முடிவிற்கு உடன்பட்டிருக்கின்றன. தவிர செல்வம் அடைக்கலநாதனுக்கும்,
சுமந்திரனுக்கும், இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பும் இதற்கு
வித்திட்டிருக்கலாம்.
சிறீதரனுக்கு செக் வைப்பதற்காகவே சுமந்திரன் இந்த முயற்சிகளை
எடுத்திருந்தார்.
தமிழரசுக் கட்சிக்குள் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்
பொறுப்பு மாவட்டகுழுக்களிடம் விடப்பட்டிருப்பதால் சிறீதரனின் கோட்டைக்குள்
நுழைய சுமந்திரனால் முடியவில்லை. அங்கு சுமந்திரன் தனியாக தன்னுடைய
ஆதரவாளர்களை இணைத்து சுயேட்சைப் பட்டியலில் ஒன்றையும் இறக்க
முயற்சிக்கின்றார்.
சென்ற தடவையும் இவ்வாறான ஒரு சுயேட்சைப் பட்டியலை
இறக்கியிருந்தார். அவர் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் பிடிபடாமல் இந்தச்
செயல்களை முன்னெடுப்பதால் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குள்
மாட்டுப்படுவதில்லை. கட்சி மீது வழக்குத் தொடுக்கும் நடவடிக்கையும் இவ்வாறு
தான் மேற்கொண்டிருந்தார்.
சந்திரகுமாரின் செல்வாக்கினால் வரும் ஆசனங்களையும், தனது சுயேட்சைப்
பட்டியலுக்கு கிடைக்கும் ஆசனங்களையும் சேர்த்து கிளிநொச்சி மாவட்டத்தின் சபைகளை கைப்பற்றுவதே இம்முயற்சியின் பின்னாலுள்ள இலக்காகும். இந்த
சதி முயற்சிகளை சிறீதரன் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி உள்ளார்.
கிளிநொச்சி
மாவட்டத்தில் தனக்கு வேறு கட்சிகளினால் பிரச்சினையில்லை. தனது சொந்தக்
கட்சியின் தலைமையினால் தான் பிரச்சினை என அவர் கூறியிருக்கின்றார்.
சந்திரகுமார் மிக நீண்ட காலமாகவே தென்னிலங்கை சிங்களக் கட்சிகளோடு இணைந்து
செயல்பட்டவர்.சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய
மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டவர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப்பொது
வேட்பாளரையும் அவர் நிராகரித்திருந்தார்.மொத்தத்தில் தமிழ்த் தேசிய
அரசியலுக்கு எதிராக செயற்பட்ட வரை தமிழ்த் தேசியக் கட்சி என்று கூறிக்
கொள்ளும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு சேர்த்துக் கொள்ள
முடியும் என்ற விமர்சனமும் பலரால் முன்வைக்கப்படுகின்றது.
கட்சிகளின் நிலை
அரசியல் சூழல் பண்புரு மாற்றத்திற்கு உள்ளாவது வழமை தான். சந்திரகுமார்
தமிழ்த்தேசிய அரசியலுக்கு மீளவருவாரெனின் அதனை ஏற்றுக் கொள்வதில் தவறிருக்க
முடியாது . ஆனால் அவர் அதனை நடைமுறையில் நிரூபித்த பின் சேர்ந்திருக்கலாம்
என்ற கருத்தும் பரவலாக உண்டு.
தென்னிலங்கை சிங்கள கட்சிகளுக்கு சார்பாக
செயற்படும் தமிழ்க்கட்சிகளுக்கு எதிர்காலம் மிகக் குறைவு. அதற்கு பிரதானமாக
இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று அவற்றின் நிவாரண அரசியலைத் தொடர்ந்து மேற்கொள்ள
முடியாமை, இரண்டாவது தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி. இந்த இரண்டும்
கட்சிகளின் ஆதரவு தளத்தினை அடியோடு அகற்றியுள்ளன.
டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ
மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அதன் ஆதரவாளர்கள்
மட்டுமல்ல உறுப்பினர்கள் கூட தேசிய மக்கள் சக்தியை நோக்கி அணிதிரள
தொடங்கியுள்ளனர்.
நிவாரண அரசியலுக்குள்ள ஆபத்தான நிலை இதுதான்.வேறு யாராவது அதிகம்
கொடுத்தால் மக்கள் அந்தப் பக்கம் சாய்ந்து விடுவர்.
புலம்பெயர் தரப்புகள்
நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதும் இவர்களின் வீழ்ச்சிக்கு காரணம். சிங்களக்
கட்சிகளின் நேரடி முகவர்களான அங்கஜன் இராமநாதன் , விஜயகலா மகேஸ்வரன்
போன்றோருக்கும் தமிழ்ப்பிரதேசங்களில் எதிர்காலம் இல்லை. அவர்களின் கட்சிகள்
தென்னிலங்கையில் அம்பலப்பட்டு நிற்பதும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இவர்கள்
அனைவரது வாக்குகளையும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி
ஒன்றாக திரட்டியிருந்தது.
சந்திரகுமாரை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்ததன் மூலம்
சுமந்திரனுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். ஒன்று கிளிநொச்சியில்
சிறீதரனின் செல்வாக்கை குறைப்பது. இரண்டாவது ஜனநாயகத் தமிழ்த்தேசிய
கூட்டமைப்புடன் சிறீதரனை நெருங்க விடாமல் தடுப்பது.
இந்த இரண்டிலும்
சுமந்திரன் வெற்றி காண்பாரா? எதிர்காலம் தான் கூறும்.
விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து விடப்பட்டுள்ளது. அது
அனைத்துச்சபைகளிலும் தனித்துப் போட்டியிடுவது எனத் தீர்மானித்துள்ளது.
தமிழரசுக்கட்சி குருவிச்சை பீடித்த மரமாக இருப்பதனால் அதில் இணைய அதனால்
முடியாது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் மணிவண்ணனுக்கு முரண்பாடு
இருப்பதனால் அதனோடும் இணைய முடியாது. இணையக்கூடிய தரப்பு ஜனநாயகத்தமிழ்
தேசியக்கூட்டமைப்பு ஒன்றுதான் . ஆனால் அங்கும் தமிழ் மக்கள் கூட்டணியின்
கோரிக்கைகள் ஏற்காமையும், சந்திரகுமாரின் பிரசன்னமும் தடையாக உள்ளது.
கட்சியிலும் விக்கினேஸ்வரனுக்கிருந்த வெகுஜனக் கவர்ச்சி தற்போது இல்லை.
மதுபான
அனுமதிப்பத்திரம் பெற்றமை தொடர்பான அவரது ஒப்புதல் வாக்குமூலம் பலவீனமான
வெகுஜனக் கவர்ச்சியை மேலும் பலவீனமாக்கியுள்ளது. கண்ணுக்கு முன்னாலேயே
வெகுஜனக் கவர்ச்சி இறங்கிய அரசியல்வாதி என்றால் விக்கினேஸ்வரனைத் தான்
குறிப்பிடலாம்.
தமிழ் மக்கள் பேரவை காலத்தில் உச்ச நிலையில் இருந்தவர் தற்போது
மிகவும் தாழ்ந்த நிலைக்குச் சென்றுள்ளார்.கட்சியில் தற்போது வெகுஜனக்கவர்ச்சியுள்ளவர் மணிவண்ணன் மட்டும் தான்.
விக்னேஸ்வரனின் பலவீன நிலை மணிவண்ணனையும் பாதித்துள்ளது. தவிர கட்சிக்குள்
தலைமைக்கும் மணிவண்ணனுக்கும் இடையிலான முரண்பாடும் நீடிக்கின்றது.
மணிவண்ணன்
கட்சியில் இணையும் போது பொதுச்செயலாளர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்றே
கூறப்பட்டது. தற்போது அந்தப் பதவி கொடுக்கப்படுவதை கட்சியின் பழையவர்கள்
விரும்பவில்லை. கட்சியை பதிவு செய்வதற்கு நாங்கள் கடுமையாக கஸ்டப்பட்டோம் அதனை
மணிவண்ணனுக்கு தாரை வார்க்க முடியாது. என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது.
குறிப்பாக மத்திய குழு உறுப்பினர் சிற்பரன் இதில் மிகவும் உறுதியாக உள்ளார்.
கட்சியைப்பதிவு செய்வதில் அவரே கூடுதலாக ஈடுபட்டிருந்தார். இந்த
நெருக்கடியினால் விக்னேஸ்வரன் பழையவர்களுக்கும் மணிவண்ணன் தரப்புக்கும்
இடையே தத்தளித்துக் கொண்டிருக்கின்றார். கட்சிக்குள் மணிவண்ணனின் நிலை மத்திய
குழு உறுப்பினர் என்பது மட்டும் தான்.
எனினும் கட்சியினை நடைமுறையில்
இயக்குவது மணிவண்ணன் தரப்புத்தான். பழையவர்களுக்கு அந்த ஆற்றல் சிறிது கூட
கிடையாது. மணிவண்ணன் தரப்பில் உள்ளவர்கள் கட்சிக்குள் உங்களது நிலையை
வலுப்படுத்துமாறு வலிமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.வாக்குகள்
கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை கட்சியை மணிவண்ணனிடம் கொடுக்க முடியாது என்பதே
பழையவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
விக்னேஸ்வரன் இந்த இழுபறிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தனது
வசிப்பிடத்தை மீளவும் கொழும்புக்கு மாற்றியுள்ளார். முன்னர் கட்சிக்கு நிதி
உதவி செய்தவர்களும் தற்போது கைவிரித்துள்ளதாகவே செய்திகள் வருகின்றன.
ஏனைய கட்சிகளின் நிலை பற்றியும் குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,
தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் நிலை பற்றியும் மக்களின் அபிப்பிராயங்கள்
பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்.