அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி (John F Kennedy) படுகொலை குறித்த ஆயிரக்கணக்கான கோப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
மக்கள் பல வருடங்களாக இந்த ஆவணங்களிற்காக காத்திருந்தனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் ( Donald Trump) இதனை பகிரங்கப்படுத்துமாறு தனது அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
படுகொலை குறித்த பல்வேறு சந்தேகங்கள்
அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியான ஜோன் எவ் கென்னடி 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெக்சாசின் டலாஸில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
டலாஸில் உள்ள டீலிபிளாசா வழியாக ஜோன் எவ் கென்னடியின் வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தவேளை லீ ஹார்வே ஒஸ்வால்ட் என்ற நபர் பாடசாலை நூல்கள் சேமிக்கப்படும் பகுதியொன்றிலிருந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்.
இந்த நிலையில் புதிதாக வெளியாகியுள்ள விடயங்கள் காரணமாக ஏற்கனவே உள்ள தகவல்கள் மாற்றமடையுமா என நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதை அடுத்து, படுகொலை குறித்த பல்வேறு சந்தேகங்களை கொண்டுள்ள ஆவணங்களையும் ட்ரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் பிரபலமான அமெரிக்காவின் இளம் ஜனாதிபதியை கொலை செய்வது குறித்த நோக்கத்துடன் லீ ஹார்வே ஒஸ்வால்ட் ரஸ்யா சென்றார் என்ற சந்தேகங்களை கொண்டுள்ள ஆவணங்களும் ட்ரம்ப் பகிரங்கப்படுத்தியுள்ளவற்றில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஆவணங்களை தேடும் பணியில்..
பனிப்போரின் ஆரம்பகாலங்கள் குறித்த பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்களில் இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் தலையீடுகள்,கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ உலகின் ஏனைய கம்யூனிச நாடுகளிற்கு வழங்கிய ஆதரவை முறியடிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
காஸ்ரோ அமெரிக்காவுடன் யுத்தத்தை ஆரம்பிக்கும் நிலைக்கு செல்லமாட்டார் என தெரிவிக்கும் ஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்களில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றதும் கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்துமாறு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கென்னடி படுகொலை தொடர்பில் ஆயிரக்கணக்கான புதிய ஆவணங்களை தேடும் பணியில் எவ்பிஐயினர் ஈடுபட்டுள்ளனர்.