இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க சந்தைக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மூத்த ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய ஆகியோருக்கு இடையே கலந்துரையாடலின்போது அவர் இதனை கூறியுள்ளார்.
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் இலங்கையின் மறுகட்டமைப்பு, அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை அறிமுகப்படுத்தவுள்ள ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை’ குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க முதலீடு
மேலும், இலங்கைக்கு அமெரிக்க முதலீட்டை ஈர்ப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையின் கீழ், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நவீன துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்தோடு, இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது அமெரிக்க சந்தைக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்று சுட்டிக்காட்டிய அமெரிக்க தூதர் ஜூலி சங், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் உறவுகளை மேம்படுத்த ஆதரவை வழங்குவதாகக் கூறினார்.

