பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடை தொடர்பில் தான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தடை என்னை பாதிக்காது
மேலும் தெரிவிக்கையில்,
நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. அதனால் இந்த தடை என்னை பாதிக்காது. எனது அரசியலையும் பாதிக்காது.
நான் அப்படியெல்லாம் செயற்பட்டிருந்தால் நான் அங்கு தஞ்சமடைந்த காலப்பகுதியில் பிரிட்டன் என்னை கைது செய்திருக்கலாமே.
ஏன் என்னை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும்?
அப்போது இவையெல்லாம் தெரியவில்லையா? இவற்றைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் தடை
இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் நேற்று தடை விதித்துள்ளது.
உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக கருதப்படும் இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) உள்ளிட்டோர் பிரித்தானியாவால் தடைசெய்யப்பட்ட நபர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.