நிதி வரம்புகள் இருந்தபோதிலும், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அதிகரிப்பை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) கல்வியாளர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இது அரசாங்கம் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுருக்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சாத்தியமான தீர்வுகள்
அதன்படி, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் வருவாய் மற்றும் செலவின வரம்புகளை மையமாகக் கொண்டு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார கூறியுள்ளார்.
மேலும், கல்வியாளர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கியதோடு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து தொழில்முறை குழுக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசாங்கம் முழுமையாக அறிந்திருப்பதாகவும், அனைத்து தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் அவற்றை உணர்வுபூர்வமாக நிவர்த்தி செய்வதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.