யாழ்ப்பாணத்தில் (Jaffna) சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் சுண்ணக்கல் அகழ்வு குறித்து இதுவரை நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலையே சுண்ணக்கல் உள்ளிட்ட
கனிமங்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுகிறது.
தென்மராட்சியில் குறிப்பாக, மந்துவில், வேம்பிராய் பகுதிகளில் தனியார்
ஒருவர் பெருமளவான நிலப்பரப்பினை வாங்கி, தனது காணிக்குள் மண், சுண்ணக்கல்,
போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.
பாரிய பள்ளங்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர் ஒருவர், சுண்ணக்கற்களை வாங்கி
அவற்றை திருகோணமலையில் உள்ள சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை செய்து
வருகின்றார்.
குறித்த தனிநபர்களின் செயப்பாடுகளினால் அப்பகுதிகளில் பாரிய பள்ளங்கள்
தோன்றியுள்ளன.
தமது காணிகளில் கனிம வளங்களை அகழ்ந்தவர்கள் தற்போது, அரச காணிகளிலும் தமது
கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல்
காணப்படுகின்றது. இது நீரினை தேக்கி வைக்க உதவுகின்றது.
இங்கு மழைநீர் மூலம்
ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நண்ணீராக மாறுகின்றது. கடல் மட்டத்துக்கு கீழே
உவர்நீரும் கடல் மட்டத்துக்கு மேலே நன்னீரும் காணப்படுகின்றது.
அவ்வாறான
நிலையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுவதால்,
நிலத்தடி நீர் உவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அனுமதியற்ற முறை
இந்நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரி வந்த
நிலையில் , கடந்த மே மாதம் 30ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், “சட்டவிரோதமான முறையில் 2 முதல் 3
மீற்றருக்கு மேல் ஆழமாக சுண்ணக்கல் அகழப்பட்டு யாழ். மாவட்டத்தில் இருந்து
அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு சுண்ணக்கல்
எடுத்துச் செல்லப்படுகிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குற்றம்
சாட்டி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.
அதனை தொடர்ந்து ஜூன் மாதம் குறித்த பகுதிகளை அப்போதைய ஒருங்கிணைப்பு குழு
தலைவரான டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார்.
ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் சுண்ணக்கல்
அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளை நேரில் சென்று
பார்வையிட்டு, அகழ்வு பணிகளை இடைநிறுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என
அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.
இருப்பினும், இன்னமும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால், தமது
பகுதியை காப்பாற்ற உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என கோரியுள்ளனர்.