முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியை பெற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.
வறிய மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிப்பதை மையமாகக் கொண்டு இந்நிதியை பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெயர் பட்டியல்
இது தொடர்பான பெயர் பட்டியல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 11 மில்லியன் ரூபா ஐப் பெற்றுள்ளதுடன், ராஜித சேனாரத்னவுக்கு பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அலெக் அலுவிஹாரே 2.2 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் ரஞ்சித் அலுவிஹாரே 4.6 மில்லியன் ரூபா நிதியையும் பெற்றுள்ளனர்.
மில்லியன் ரூபா
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கு 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது அத்தோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சொய்சா 18 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதுடன், முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா 2.7 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுள்ளார்.
ஜோன் அமரதுங்க நான்கு மில்லியன் ரூபா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மூன்று மில்லியன் ரூபா மற்றும் விதுர விக்கிரமநாயக்க 1.5 மில்லியன் ரூபாவையும் பெற்றுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனோஜ் சிறிசேன , தயாசிறி ஜயசேகர , பி.ஹரிசன் , பி.தயாரத்ன , மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெரேரா மற்றும் பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்த நிதியில் இருந்து அண்மைய ஆண்டுகளில் உதவிகளைப் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.