உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவே ஆணை வழங்கியிருந்தனர், அந்த
ஆணைக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி
செயற்படுமாகவிருந்தால் அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதை தவிர வேறு
வழியில்லை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது
அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் முதன்மை நிலையை பெற்றுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட சபைகளைத் தவிர அதிக ஆசனங்களை தமிழரசு கட்சி பெற்ற போதும்
ஏனைய தமிழ் தேசிய கட்சிகளோடு சேர்ந்துதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம்
உள்ளது.
தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு இரண்டு நிலைப்பாடுதான் இருந்தது. ஒன்று நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற முதன்மை நிலையை இல்லாமல்
செய்வது, இரண்டாவது தமிழ்த் தேசிய கட்சிகளை ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைந்த
அரசியலுக்குள் தள்ளுவது.

தேர்தல் முடிவுகளும் கிட்டத்தட்ட அதே அளவில்தான் வந்திருக்கின்றன. தேர்தலில்
கிடைத்த வெற்றி என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றியே ஒழிய தமிழ்
கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி அல்ல.
பிடிவாத நிலை
ஆகவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும்
இணைந்து ஆட்சி அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
ஆனால் கட்சிகள் தாம் பெரும்பான்மை பெற்ற இடங்களில் தாங்கள் தான் ஆட்சி அமைக்க
வேண்டும் என்கின்ற பிடிவாத நிலையில் இருக்கின்றன.
அதேவேளை ஏனைய கட்சிகள் அதிக
ஆசனங்களை பெற்ற சபைகளிலும் கூட அவர்களை மீறி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள்
இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் பல சபைகளில் முதன்மை நிலை
பெற்றிருக்கின்ற போதும் கிளிநொச்சியை தவிர அவர்களுக்கு தனித்து ஆட்சி
அமைக்கக்கூடிய பெரும்பான்மை இல்லை.
இந்த இடங்களில் தமிழ் தேசிய பேரவையோடும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும்
பேசியிருக்கின்றனர்.
தமிழ் தேசிய பேரவை இந்த விடயத்தில் நிதானமாக மக்கள் தந்த ஆணைப்படி ஒரு கொள்கை
கூட்டை அமைப்பதற்கு வாருங்கள் என அறைகூவல் விடுத்துள்ளது.
ஆனால் இந்த அழைப்பை இலங்கை தமிழரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டமைப்பும் நிராகரித்துள்ளது. அதற்குரிய காலம் தற்போது கனியவில்லை என்று
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான கூட்டு இல்லாத நிலை
இந்நிலையில் கொள்கை ரீதியான கூட்டு இல்லாத நிலையே காணப்படுகிறது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கும் தமிழரசு கட்சிக்கும இடையில் நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் பெரும்பான்மையாக உள்ள
சபைகளில் 4இல் தாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.

அதில்
ஒன்று வவுனியா மாநகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, மானிப்பாய் பிரதேச சபை,
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை. வவுனியா நகரசபையில் சங்கு கூட்டணிதான் அதிக
ஆசனங்களை பெற்றுள்ளன.
அங்கு அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் பெரிய பிரச்சினை
இல்லை. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தாம் அதிகமான ஆசனங்களை
பெற்றுள்ளமையால் அதனை தாம் விட்டுக்கொடுக்க முடியாது என்று இலங்கை தமிழரசு
கட்சி பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மறுத்துள்ளார்.
மானிப்பாய் பிரதேச சபையிலும், மாந்தை கிழக்கு பிரதேச சபையிலும் அவர்கள்
ஏந்தவித தீர்மானத்திற்கும் வரவில்லை.
தமிழரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்ற சபைகளில் தமிழரசு கட்சியே ஆட்சி
அமைக்க வேண்டும் என்று தமிழரசு கட்சியின் தீர்மானம் உள்ளதாக தமிழரசு கட்சி
தெரிவித்துள்ளது.
உண்மையில் ஒரு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவர்கள்
தீர்மானம் எடுத்துரைக்க கூடாது. அதனையும் மீறி அவர்கள் ஒரு தீர்மானத்தை
அடித்திருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு ஒரு நெருக்கடியையும் கொடுத்துள்ளது
என குறிப்பிட்டுள்ளார்.

